Monday 27 June 2016

உங்கள் ஓட்டு லோகிக்கே. (Vote for Loki 1, Marvel Comics)

27th June 2016 - Monday: Marvel Comics: Vote Loki Part 1
Writer: Christopher Hastings Artist: Longdon Foss  Colourist: Chris Chuckry


அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடித்து வரும் இந்நேரத்தில், மார்வல் காமிக்ஸ் வெளியிட்டிருக்கும் இந்த காமிக்ஸ் இதழ் கவனத்தை ஈர்க்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலின் மிக முக்கியமான கட்டம், இரண்டு அதிபர் வேட்பாளர்களும் ஒரே விவாத மேடையில் தோன்றி, கருத்துகளை முன்வைப்பதாகும்.
அப்படி விவாத மேடை நடைபெற இருக்கும் அரங்கை, ஹைட்ரா குழு (பத்திரிகையாளர்கள் வேடத்தில்) சுற்றி வளைத்து, இரண்டு அதிபர்களையும் கொல்ல எத்தனிக்கும்போது, லோகி குறுக்கிட்டு, ஹைட்ரா குழுவினரின் முயற்சியை முறியடிக்கிறார்.


அவெஞ்சர்ஸ் படத்தில் “தார்” இன் சகோதரனாக வரும் லோகியை நினைவிருக்கிறதா? அவர்தான் இத்தொடரின் நாயகன். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, பத்திரிகையாளர்களை சந்திக்கும் லோகி, அதிபர் வேட்பாளர்கள் இருவருமே பொய்யைக் கூட ஒழுங்காகச் சொல்லத்தெரியாதவர்கள் என்று சொல்லி விட்டுப் போயிருந்தால் பரவாயில்லை. அடுத்ததாக, அவர் சொல்லும் “நானாக இருந்தால், உங்கள் முகத்திற்கு நேராக, நம்பும்படியாக பொய்யுரைப்பேன்” என்று சொல்வது பலரின் கவனத்தை கவர, மீடியாவின் அசுரத் தீனிக்கு அன்றைய பேசு பொருளாக லோகி அமைகிறார்.
தொடர்ச்சியாக நடக்கும் சில சங்கதிகளின் விளைவாக, அமெரிக்க அதிபர் வேட்பாளராக லோகி உருவாக, கதையின் கடைசி பக்கத்தில் தார் வருவதாக இந்த முதல் பாகம் அமைக்கப்பட்டிருக்கிறது. 
அமெரிக்க அதிபர்களின் தன்மை, அரசியல் விளையாட்டுகள், அதில் மீடியாவின் பங்கு என்று அடித்து ஆடி இருக்கிறார் கதாசிரியர் க்ரிஸ்டபஃர் ஹாஸ்டிங்ஸ். அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஓவியங்களால் சிறப்பு செய்திருக்கிறார் லங்க்டன் ஃபாஸ்.

தீர்ப்பு: ஜாலியாக படிக்க வேண்டிய அரசியல் காமிக்ஸ் இது.

Friday 20 November 2015

காமிக்ஸ் அறிமுகம் 1: Black Tiger (Graphic india) Part 1

டியர் காமிரேட்ஸ்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு சோம்பல் முறித்து, ஒரு காமிக்ஸ் அறிமுகம்.
எவ்வளவு நாட்களுக்குத்தான் அயல்நாட்டு சூப்பர் ஹீரோக்களின் கதைகளையே படிப்பது? அப்படி ஒரு சூப்பர் ஹீரோ நமது நாட்டில் உருவாகி, சாதனை புரிந்தால் எப்படி இருக்கும்?
 
 
இந்த சிந்தனையின் விளைவுதான் ப்ளாக் டைகர் என்ற இந்த புதிய காமிக்ஸ் தொடர். அதுவும் இக்கதையை எழுதியவர் சாதாரண ஆளில்லை. சமீபத்தில் வெளியான பேட்மேன் படத்தில் பேன் (Bane) என்ற கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்தை உருவாக்கிய சக் டிக்ஸன் தான் இத்தொடருக்கு கதாசிரியர்.

ஓவியராக கிரஹம் நோலனும், வண்ணக்கலவை கோர்த்தது நமது சுந்தரக் கண்ணன் சாரும் எனும்போது, இத்தொடர் மீதான மரியாதை இன்னமும் கூடுகிறது. 

தி இந்து தமிழ் நாளிதழின் இளமை புதுமை இணைப்பில் க்ராபிஃக் நாவல் பகுதியில் இவ்வார கட்டுரையை படித்து முழுக்கதையையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இத்தொடரின் அறிமுகத்தைப்படிக்க, நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ......
வேறென்ன, தென்னிந்தியாவில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு என்று ஆறு பதிப்புகளை கொண்ட தி ஹிந்து தமிழ் நாளிதழை வாங்கி இந்த கட்டுரையை படிக்கவேண்டியதுதான்.

Friday 13 November 2015

க்வென்டின் டாரன்ட்டினோ The Hateful 8 காமிக்ஸ்

டியர் காமிரேட்ஸ்,
மாடஸ்டி ப்ளைசின் அதி தீவிர ரசிகரான இயக்குநர் க்வென்டின் டாரன்ட்டினோ தனது திரைப்படங்களை சார்ந்த காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். அவரது சமீபத்திய படமான ஜாங்காவைச் சார்ந்து இரண்டு காமிக்ஸ் புத்தகத் தொடர்கள் வெளியாகின. ஒன்று திரைப்படத்தின் கதையை அப்படியே காமிக்ஸ் கதையாக வழங்கிய தொடர். 
இரண்டாவது, திரைப்படத்தின் க்ளைமாக்ஸிற்கு பிறகு ஜாங்கோ என்ன செய்கிறான்? என்பதைப் பற்றியது. (அதன் பின்னர் ஜாங்கோ இன்னுமொரு திரைப்பட / காமிக்ஸ் ஹீரோவான ஸாரோவோடு இணைந்து ஒரு புதிய சாகசத்தை மேற்கொள்கிறார் - Django Vs Zorro). இந்தக் காமிக்ஸ் தொடர்கள் இரண்டையும் டைனமைட் நிறுவனம் வெளியிட்டது.
 
க்வென்டின் டாரன்ட்டினோவின் அடுத்த திரைப்படம் The Hateful 8 இவ்வாண்டு டிசம்பரில் Christmas அன்று வெளியாகிறது. வழக்கமாக படத்தின் Preview / Trailer போன்றவை காணோளி வடிவில் தான் வரும். ஆனால் The Hateful 8ஐ சந்தைப்படுத்தும் விதத்தில் க்வென்டின் டாரன்ட்டினோஒரு 8 பக்க காமிக்சை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த அட்டகாசமான காமிக்ஸ் முன்னோட்டத்தை ஓவிய வடிவில் நமக்கு வழங்கி இருப்பவர் ஓவியர் ஜாக் மேயர். இந்த காமிக்ஸ் முன்னோட்டத்திற்கு வசனம் நமது க்வென்டின் டாரன்ட்டினதான் என்பதால், அவரது வழமையான ஸ்டைலில்தான் வசனங்கள் “சிறப்பாக” வந்துள்ளது.

இந்த முன்னோட்டத்தை வெளியிட்டு இருப்பது உலகப்புகழ் பெற்ற PlayBoy பத்திரிகையாகும். இத்தொடரின் முதல் பக்கம் இதோ:


 இரண்டாவது பக்கம்:


 மூன்றாவது பக்கம்:
நான்காவது பக்கம்:
ஐந்தாவது பக்கம்:
ஆறாவது பக்கம்:
ஏழாவது பக்கம்:
எட்டாவது மற்றும் கடைசி பக்கம்:
நன்றி ப்ளேபாய், நன்றி ஸாக் மேயர், நன்றி டாரன்ட்டினோ.

Thursday 1 October 2015

விகடன் கிராபிக்ஃஸ் - சந்திரஹாசம்

டியர் காமிரேட்ஸ்,
இன்று தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். ஏனென்றால் ஆனந்த விகடன் நிறுவனத்தின் புதிய இம்ப்ரிண்ட் ஆன “விகடன் கிராபிஃஸ்” இன்று அறிமுகம் ஆகிறது. அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்தப் புத்தகம் நிச்சயமாக வாசிப்பில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் என்றே நம்புகிறேன்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற (காவல் கோட்டம் புகழ்) எழுத்தாளர் திரு சு. வெங்கடேசன் அவர்களின் கதைக்கு, வண்ணமயமாக உயிரூட்டி இருக்கிறார் கோவையை சேர்ந்த ஓவியரான பாலஷண்முகம். 

காலத்தால் அழிக்க முடியாத புகழை பெற்ற ஒரு தலைவருக்கு இரண்டு மனைவிகள். முறையே இரண்டு மகன்கள். மூத்தவன் இருக்க, இளையவனே சிறந்தவன் என்று தந்தை கருத, அதனால் மூத்த மனைவியின் மகன் செய்யும் சதித் திட்டங்கள் நாட்டையே நிலைகுலைய வைக்கிற அளவிற்கு போகிறது. அந்த சதித் திட்டங்களை எல்லாம் எப்படி இளைய மகன் சமாளிக்கிறான் என்பதை வீரம், அன்பு, பாசம், காதல் என்று நவரசங்களையும் கலந்து உருவாக்கப்பட்ட கதையே சந்திரஹாசம்.
 நான்கு மாதங்களுக்கு முன்பாக விகடன் அலுவலகத்திற்கு சென்ற போது, ஆசிரியர் குழு இதைப்பற்றி ஆர்வமாக, சிலாகித்து பேசினார்கள். அப்போது முதல், இந்த இதழ் எப்போது கைக்கு வரும் என்று எதிர்பார்க்க வைக்கும் விதமாக சிறப்பாக விளம்பரம் செய்யப்பட்டு வந்து, இதோ இன்று முதல் டீசர் ஆரம்பம்.
இளைய தளபதி விஜய்யின் புலி படத்தின் இடைவெளியில் இந்த சந்திரஹாசத்தின் விளம்பரம் இணைக்கப்பட்டு உள்ளது. ஆகவே, அனைவரின் கவனத்தையும் இது கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. புத்தகத்தின் முதல் விமர்சனம் நமது தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்திலிருந்து விரைவில் வெளியாகும். 

நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்த புத்தகத்தை நீங்கள் இப்போது முன்பதிவு செய்யலாம். 150+ பக்கங்களைக் கொண்ட இந்த அருமையான முழுவண்ண புத்தகத்தை முன்பதிவு மூலமாக பெற நீங்கள் வெறும் ஐந்நூறு ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். முந்துங்கள். இந்த புத்தகத்தின் விலை 1, 499/- ஆனால் முன்பதிவு திட்டத்தின் கீழ் 999/- மட்டும் செலுத்தினால் போதும். மேலும் அக்டோபர் மாத இறுதிக்குள்ளாக முன்பதிவு செய்தால், ஒரு அட்டகாசமான காணொளி புத்தகம் இலவசம்.

ஒரு அட்டகாசமான வரலாற்றுப் பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லவிருக்கும் விகடன் குழுமத்திற்கும், தீவிர காமிக்ஸ் இரசிகரான குழும எம்.டி அவர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்.

Monday 28 September 2015

James Bond 007 VAGR Virgin Edition

டியர் காமிரேட்ஸ்,

இந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி ஜேம்ஸ்பாண்டின் அடுத்த திரைப்படம் வெளிவருவதையொட்டி, புதிய காமிக்ஸ் தொடர் ஒன்றை அமெரிக்காவின் டைனமைட் நிறுவனம் வெளியிடவுள்ளதை ஏற்கனவே அறிவித்திருந்தேன். அதன் விலை 3.99 டாலர்கள் என்பதையும் சொல்லி இருந்தேன். ஆனால், இப்போது புதியதாக ஒரு விஷயத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.உலக அளவில் காமிக்ஸ் விற்பனையை தூண்ட, Variant Covers என்ற பெயரில் ஒரே கதைக்கு நான்கு, ஐந்து அட்டைப்படங்களை வெளியிடுவது சமீபத்தில் நடந்து வரும் ஒரு விஷயம். அதாவது, ஒரு வாசகன் எப்படியும் ஒரு புத்தகத்தை வாங்கி விடுவான். ஆனால், ஒரு இரசிகன் (ஒரே கதையை, வித்தியாசமான அட்டைப்படங்களுக்காக) அனைத்து புத்தகங்களையும் வாங்க முயல்வான். இதனால் விற்பனை கணிசமான அளவில் பெருகும். சமீபத்தில் The Phantom வேதாளர் கதைக்கு இப்படி ஒரு யுத்தியை நண்பர் டேனியல் ஹெர்மன் கையாண்டதை சொல்லியிருந்தேன்.
இதே போல, இன்னொரு யுத்தியும் இருக்கிறது. அதற்கு பெயர் Virgin Edition. இதில் நிறுவனத்தின் பெயரோ, கதையின் பெயரோ வேறு எதுவுமே இருக்காது. ஓவியத்தை முழுவதுமாக இரசிக்க நினைப்பவர்களுக்காக இப்படி ஒரு புத்தகத்தையும் வெளியிடுகிறார்கள். நமது ஜேம்ஸ் பாண்ட் கதைக்கும் இப்படி ஒரு வர்ஜின் எடிஷனை தயார் செய்து உள்ளார்கள். இந்த அட்டைப்படத்தை வரைந்தவர் க்ளென் கார்பி என்ற ஓவியர். என்ன, விலை தான் சற்றே கூடுதல். ஆமாம், வழக்கமான புத்தகம் 3.99 டாலர்களுக்கு கிடைக்கும் போது, இந்த ஸ்பெஷல் எடிஷனின் விலை மட்டும் 50 டாலர்கள். என்ன ஒரு வியாபார தந்திரம்?


சரி, இதே நேரத்தில் புத்தகம் எப்படி இருக்கும், ஓவியங்கள் எப்படி இருக்கும் என்பதை இரசிக்க, இதோ சில பல பக்கங்கள். 

பதிப்பாளர்: டைனமைட்
தொடரின் பெயர்: VARGR
கதாசிரியர்: வாரன் எல்லிஸ்
ஓவியர்: ஜேசன் ராபர்ட்ஸ்
மொத்த பாகங்கள்: 5
பக்கங்கள்: 32
முதல் இதழ் வெளியாகும் நாள்: நவம்பர் 4, 2015.
விலை: 3.99 டாலர்.

கதைச்சுருக்கம்: ஜெர்மன் நகரமான ஹெல்சின்க்கியில் ஒரு பழி வாங்கும் படலத்தை வெற்றிகரமாக முடிக்கிறார் ஜேம்ஸ் பாண்ட். ஆனால், அதே சமயம் இலண்டனில் ஒரு ”டபுள் ஓ” ஏஜெண்ட் கொல்லப்பட, அவரது பணியை முடிக்க ஜேம்ஸ் வரவழைக்கப்படுகிறார். அதே சமயம் பெர்லினில் அவருக்கு எதிராக ஒரு சதித் திட்டம் தீட்டப்படுவதாக முதல் இதழ் செல்கிறது.

28th September 2015: Kid Lucky 3


டியர் காமிரேட்ஸ்,

உலகப் புகழ் பெற்ற காமிக்ஸ் கௌ பாய் ஹீரோவான லக்கி லூக்கின் கதைகளை சிறுவர்களும் படித்து மகிழ, அவர்களை படிக்க வைக்க, லக்கி லூக்கின் சிறு வயது சாகசங்களை மையமாக வைத்து கிட் லக்கி (சிறு வயது லக்கி லூக்) என்ற தொடர் சமீப ஆண்டுகளில் வந்து கொண்டிருக்கிறது.

இத்தொடரை செம்மைப்படுத்துபர் ஓவியர் அக்டே என்ற ஓவிய இராட்சஸன். இவர் தான் சமீப ஆண்டுகளில் லக்கி லூக்கை வரநிது வருபவர். இவரது கைவண்ணத்தில் அடுத்த சுட்டி லக்கியின் சாகசம் தயார். மூன்றாவது கதையாக வரப்போகும் இந்த இதழ் நவம்பர் ஆறாம் தேதி வரப்போகிறது. 

இதோ, இந்த புதிய இதழின் அட்டைப்படம் உங்கள் பார்வைக்கு: 


க்ரிஸ்டியன் டெனாயர் - வேய்ன் ஷெல்டன் காமிக்ஸ் ஓவியரின் பிறந்த நாள்

28th September 2015: 1945 - Christian Denayer Artist of Wayne Shelton is born

டியர் காமிரேட்ஸ்,

மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியராக வரவிரும்பிய ஒருவர், கார்களின் மீதிருந்த காதலாலும், காமிக்ஸ் மீதிருந்த ஆர்வத்தாலும் ஓவியரானதே இன்றைய பதிவின் முக்கிய அம்சம்.சமீபத்திய முத்து காமிக்ஸ் வரவான வேய்ன் ஷெல்டனின் கதையை படித்தவர்கள், அந்த கதையின் ஓவியங்களை / அசுரத்தனமான வேன், கார் மற்றும் பெரிய கண்டெய்னர்கள் நிறைந்த அத்தொடரை இரசிக்காமல் இருக்கவே முடியாது.அதனை வரைந்த ஓவியர், தன்னுடைய இளம் வயதில் ஆசிரியர் பயிற்சியை முடித்து விட்டு ஒரு ஆசிரியராக வேலைக்கு சேர விரும்பினார். ஆனால், ஓவியங்களின் மேல் கொண்ட காதலால், விளம்பர நிறுவனத்தில் ஆர்ட்டிஸ்ட் ஆக வேலைக்கு சேர்ந்து, பின்னர் படிப்படியாக ஓவியராகவே மாறி விட்டார்.


1966-ஆம் ஆண்டு இவர் நமது ரிப்போர்ட்டர் ஜானி கதாசிரியரை சந்தித்ததே இவரது வாழ்வில் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தது.. அந்த சந்திப்புக்கு பின்னர் André-Paul Duchateauஐ தன்னுடைய ஆதர்ஷ நாயகனாக கொண்டு, பல காமிக்ஸ் தொடர்களை இவருடன் சேர்ந்து பணி புரிந்து, அதன்மூலமாக தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார்.2001-ஆம் ஆண்டு முதல் வான் ஹாம்மே உடன் இணைந்து வேய்ன் ஷெல்டன் கதைகளுக்கு ஓவியம் வரைந்து கொண்டு இருக்கிறார் க்ரிஸ்டியன் டெனாயர்.

இன்று அவருக்கு 70 ஆவது பிறந்த நாள்.

வாழ்த்துகள் ஓவியரே.