Monday, 28 September 2015

James Bond 007 VAGR Virgin Edition

டியர் காமிரேட்ஸ்,

இந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி ஜேம்ஸ்பாண்டின் அடுத்த திரைப்படம் வெளிவருவதையொட்டி, புதிய காமிக்ஸ் தொடர் ஒன்றை அமெரிக்காவின் டைனமைட் நிறுவனம் வெளியிடவுள்ளதை ஏற்கனவே அறிவித்திருந்தேன். அதன் விலை 3.99 டாலர்கள் என்பதையும் சொல்லி இருந்தேன். ஆனால், இப்போது புதியதாக ஒரு விஷயத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.உலக அளவில் காமிக்ஸ் விற்பனையை தூண்ட, Variant Covers என்ற பெயரில் ஒரே கதைக்கு நான்கு, ஐந்து அட்டைப்படங்களை வெளியிடுவது சமீபத்தில் நடந்து வரும் ஒரு விஷயம். அதாவது, ஒரு வாசகன் எப்படியும் ஒரு புத்தகத்தை வாங்கி விடுவான். ஆனால், ஒரு இரசிகன் (ஒரே கதையை, வித்தியாசமான அட்டைப்படங்களுக்காக) அனைத்து புத்தகங்களையும் வாங்க முயல்வான். இதனால் விற்பனை கணிசமான அளவில் பெருகும். சமீபத்தில் The Phantom வேதாளர் கதைக்கு இப்படி ஒரு யுத்தியை நண்பர் டேனியல் ஹெர்மன் கையாண்டதை சொல்லியிருந்தேன்.
இதே போல, இன்னொரு யுத்தியும் இருக்கிறது. அதற்கு பெயர் Virgin Edition. இதில் நிறுவனத்தின் பெயரோ, கதையின் பெயரோ வேறு எதுவுமே இருக்காது. ஓவியத்தை முழுவதுமாக இரசிக்க நினைப்பவர்களுக்காக இப்படி ஒரு புத்தகத்தையும் வெளியிடுகிறார்கள். நமது ஜேம்ஸ் பாண்ட் கதைக்கும் இப்படி ஒரு வர்ஜின் எடிஷனை தயார் செய்து உள்ளார்கள். இந்த அட்டைப்படத்தை வரைந்தவர் க்ளென் கார்பி என்ற ஓவியர். என்ன, விலை தான் சற்றே கூடுதல். ஆமாம், வழக்கமான புத்தகம் 3.99 டாலர்களுக்கு கிடைக்கும் போது, இந்த ஸ்பெஷல் எடிஷனின் விலை மட்டும் 50 டாலர்கள். என்ன ஒரு வியாபார தந்திரம்?


சரி, இதே நேரத்தில் புத்தகம் எப்படி இருக்கும், ஓவியங்கள் எப்படி இருக்கும் என்பதை இரசிக்க, இதோ சில பல பக்கங்கள். 

பதிப்பாளர்: டைனமைட்
தொடரின் பெயர்: VARGR
கதாசிரியர்: வாரன் எல்லிஸ்
ஓவியர்: ஜேசன் ராபர்ட்ஸ்
மொத்த பாகங்கள்: 5
பக்கங்கள்: 32
முதல் இதழ் வெளியாகும் நாள்: நவம்பர் 4, 2015.
விலை: 3.99 டாலர்.

கதைச்சுருக்கம்: ஜெர்மன் நகரமான ஹெல்சின்க்கியில் ஒரு பழி வாங்கும் படலத்தை வெற்றிகரமாக முடிக்கிறார் ஜேம்ஸ் பாண்ட். ஆனால், அதே சமயம் இலண்டனில் ஒரு ”டபுள் ஓ” ஏஜெண்ட் கொல்லப்பட, அவரது பணியை முடிக்க ஜேம்ஸ் வரவழைக்கப்படுகிறார். அதே சமயம் பெர்லினில் அவருக்கு எதிராக ஒரு சதித் திட்டம் தீட்டப்படுவதாக முதல் இதழ் செல்கிறது.

28th September 2015: Kid Lucky 3


டியர் காமிரேட்ஸ்,

உலகப் புகழ் பெற்ற காமிக்ஸ் கௌ பாய் ஹீரோவான லக்கி லூக்கின் கதைகளை சிறுவர்களும் படித்து மகிழ, அவர்களை படிக்க வைக்க, லக்கி லூக்கின் சிறு வயது சாகசங்களை மையமாக வைத்து கிட் லக்கி (சிறு வயது லக்கி லூக்) என்ற தொடர் சமீப ஆண்டுகளில் வந்து கொண்டிருக்கிறது.

இத்தொடரை செம்மைப்படுத்துபர் ஓவியர் அக்டே என்ற ஓவிய இராட்சஸன். இவர் தான் சமீப ஆண்டுகளில் லக்கி லூக்கை வரநிது வருபவர். இவரது கைவண்ணத்தில் அடுத்த சுட்டி லக்கியின் சாகசம் தயார். மூன்றாவது கதையாக வரப்போகும் இந்த இதழ் நவம்பர் ஆறாம் தேதி வரப்போகிறது. 

இதோ, இந்த புதிய இதழின் அட்டைப்படம் உங்கள் பார்வைக்கு: 


க்ரிஸ்டியன் டெனாயர் - வேய்ன் ஷெல்டன் காமிக்ஸ் ஓவியரின் பிறந்த நாள்

28th September 2015: 1945 - Christian Denayer Artist of Wayne Shelton is born

டியர் காமிரேட்ஸ்,

மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியராக வரவிரும்பிய ஒருவர், கார்களின் மீதிருந்த காதலாலும், காமிக்ஸ் மீதிருந்த ஆர்வத்தாலும் ஓவியரானதே இன்றைய பதிவின் முக்கிய அம்சம்.சமீபத்திய முத்து காமிக்ஸ் வரவான வேய்ன் ஷெல்டனின் கதையை படித்தவர்கள், அந்த கதையின் ஓவியங்களை / அசுரத்தனமான வேன், கார் மற்றும் பெரிய கண்டெய்னர்கள் நிறைந்த அத்தொடரை இரசிக்காமல் இருக்கவே முடியாது.அதனை வரைந்த ஓவியர், தன்னுடைய இளம் வயதில் ஆசிரியர் பயிற்சியை முடித்து விட்டு ஒரு ஆசிரியராக வேலைக்கு சேர விரும்பினார். ஆனால், ஓவியங்களின் மேல் கொண்ட காதலால், விளம்பர நிறுவனத்தில் ஆர்ட்டிஸ்ட் ஆக வேலைக்கு சேர்ந்து, பின்னர் படிப்படியாக ஓவியராகவே மாறி விட்டார்.


1966-ஆம் ஆண்டு இவர் நமது ரிப்போர்ட்டர் ஜானி கதாசிரியரை சந்தித்ததே இவரது வாழ்வில் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தது.. அந்த சந்திப்புக்கு பின்னர் André-Paul Duchateauஐ தன்னுடைய ஆதர்ஷ நாயகனாக கொண்டு, பல காமிக்ஸ் தொடர்களை இவருடன் சேர்ந்து பணி புரிந்து, அதன்மூலமாக தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார்.2001-ஆம் ஆண்டு முதல் வான் ஹாம்மே உடன் இணைந்து வேய்ன் ஷெல்டன் கதைகளுக்கு ஓவியம் வரைந்து கொண்டு இருக்கிறார் க்ரிஸ்டியன் டெனாயர்.

இன்று அவருக்கு 70 ஆவது பிறந்த நாள்.

வாழ்த்துகள் ஓவியரே.

Saturday, 26 September 2015

தமிழ் காமிக்ஸ் உலகம் - முதல் நிகழ்வுஅன்புடையீர்,

தமிழ் காமிக்ஸ் உலகம் மற்றும் TCU Syndicateன் சார்பாக வணக்கங்கள்.

தமிழ் காமிக்ஸ் உலகின் முதல் காமிக்ஸ் கருத்தரங்கிற்கு உங்களை அழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த காமிக்ஸ் மற்றும் கிராபிஃக் நாவல் கருத்தரங்கானது நமது ஊடகங்களில் நிலவும் பல தவறான தகவல்களை களையவும், உண்மையான வரலாற்று தகவல்களை எடுத்துரைக்கும் ஒரு களமாகவும் செயல்படும். இந்த நிகழ்வின் ஊடே தமிழில் காமிக்ஸ் மற்றும் சித்திரக் கதைகளை படைக்கும் ஒரு அமைப்பும் அறிமுகப்படுத்தப்படும். தமிழில் உலகத் தரத்தில் சித்திரக் கதைகளை கொண்டு வருவதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாகவும் இது செயல்படும். மேலும் 
 • காமிக்ஸ் என்றால் என்ன
 • காமிக்சுக்கும், கிராபிஃக் நாவலுக்கும் என்ன வேறுபாடு?
 • தமிழில் வெளியான முதல் சிறுவர் இதழ் எது? 
 •  தமிழின் முதல் கிராபிஃக் நாவல் எது? 
 •  தமிழில் வெளியான முதல் டிஜிடல் காமிக்ஸ் எது? 
 •  தமிழின் முதல் காமிக்ஸ் சிண்டிகேட் எது?
இப்படியாக பல கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் ஒரு நிகழ்வு தான் இது.

நிகழ்வு: காமிக்ஸ் மற்றும் கிராபிஃக் நாவல் பற்றிய கருத்தரங்கு

பங்கேற்போர்: ஓவியர் டிராட்ஸ்கி மருது & கிங் விஸ்வா

நாள் & நேரம்: சனிக்கிழமை மாலை 6:00 மணி

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், கே கே நகர், சென்னை 78.

நிகழ்வு நிரல்: 

05.30 pm        விருந்தினர் வருகை
06.00 pm        வரவேற்பு மற்றும் பேச்சாளர்கள் அறிமுகம்: ஜீவ கரிகாலன்.
06.30 pm        கதை நிகழ்த்துதல்
07.00 pm        தலைமையுரை: ஓவியர் திரு மருது அவர்கள்
07.30 pm        காமிக்ஸ் மற்றும் கிராபிஃக் நாவல்கள் பற்றிய ஒரு அறிமுகம்
07.15 pm        திரு மருது அவர்கள் TCU Syndicate ஐ அறிமுகம் செய்வார்
07.30 pm        கிங் விஸ்வா -கதை நிகழ்த்துதல்
08.00 pm        காமிக்ஸ் & கிராபிஃக் நாவல்கள் குறித்த உரையாடல்
08.30 pm        கிங் விஸ்வா நிறைவுரை
08.50 pm        நன்றியுரை - யாவரும்.காம் குழுவின் ஜீவ கரிகாலன்
09.00 pm        விருந்தினர் உபசரிப்பு
 
உங்களின் மேலான வருகையை எதிர்நோக்கும் தமிழ் காமிக்ஸ் உலகம் & யாவரும் டாட் காம் குழுவினர்.

நமது இன்றைய நிகழ்வைப்பற்றி தி இந்து தமிழ் நாளிதழில் தகவல் அளித்து இருக்கிறார்கள். நண்பர்களுக்கு நன்றீஸ்.


Friday, 25 September 2015

தமிழ் காமிக்ஸ் உலகம்: முதல் நிகழ்வு

டியர் காமிரேட்ஸ்,

ஒருவழியாக அந்த நாளும் வந்து விட்டது. ஆமாம், நாளைக்கு தமிழ் காமிக்ஸ் உலகில் முதன்முறையாக திரு டிராட்ஸ்கி மருது அவர்களின் தலைமையில் ஒரு நிகழ்ச்சி முழுக்க முழுக்க காமிக்ஸ் மற்றும் கிராபிஃக் நாவல்களைப்பற்றி நடக்க உள்ளது.


நாளைய நிகழ்வில்,

 • வரவேற்பு மற்றும் பேச்சாளர்கள் அறிமுகம்: ஜீவ கரிகாலன்
 • கதை நிகழ்த்துதல் - TCU பற்றிய அறிமுகம்
 • காமிக்ஸ் மற்றும் கிராபிஃக் நாவல்கள் பற்றிய ஒரு அறிமுகம்
 • தலைமையுரை : ஓவியர் திரு மருது அவர்கள்
 • உங்கள் வாழ்நாளில் நீங்கள் தவறாமல் படிக்க வேண்டிய கிராபிஃக் நாவல்கள் பற்றிய ஒரு விவாதம்
 • கிங் விஸ்வா (நிறைவுரை -கதை நிகழ்த்துதல்)
 • நன்றியுரை - யாவரும்.காம் ஜீவ கரிகாலன்
என்று அட்டகாசமாக திட்டமிடப்பட்டுள்ளது. உங்கள் இலக்கிய வாசிப்பில் ஒரு திருப்புமுனையை நிகழ்த்த இருக்கும் இந்நிகழ்ச்சியை மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள்.
இரசனை, வாசிப்பு குறித்தான உங்கள் பார்வையை மாற்ற உதவும் ஒரு நிகழ்வு இது.

என்னுடைய வாசகர் வட்டம் மற்றும் விமர்சகர் வட்ட நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

Wednesday, 23 September 2015

1827 முதல் 2015 வரை: போட்டி 1

டியர் காமிரேட்ஸ்,
இந்த வார சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை டிஸ்கவரி புக் பேலசில் தமிழில் காமிக்ஸ் மற்றும் கிரபிஃக் நாவல்களுக்கான முதல் இலக்கிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. 
 

அது சார்ந்து ஒரு கேள்வி: திரு கோகுலன் நடராஜன் அவர்கள் வடிவமைத்துக் கொடுத்த இந்த அட்டகாசமான போஸ்டரில் ஜோக்கரின் கையில் மொத்தம் ஆறு புத்தகங்கள் இருப்பது போல வடிவமைத்து இருக்கிறோம். அந்த ஆறு புத்தகங்கள் என்ன? என்பதை சற்று உற்று நோக்கினாலே தெரிந்து விடும்.
எனவே, கேள்வி மிகவும் எளிமையானதே. அந்த ஆறு புத்தகங்களின் தலைப்பு என்ன என்பதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள். இந்தியாவிற்குள் இருந்து வரும் பதில்களுக்கு ஜோக்கரின் எதிரியான பேட்மேன் சாகசம் செய்த முதல் முழு வண்ண, முழு நீள, தமிழ் காமிக்ஸ் புத்தகம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
பதில்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tamilcomicsulagam@gmail.com
வாழ்த்துகள். நினைவிருக்கட்டும், முதலில் வரும் சரியான பதிலே பரிசீலிக்கப்படும். தயவு செய்து குறுஞ்செய்தியாக பதில்களை அனுப்பாதீர்கள். அவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. வாட்சப் பதிலும் அப்படியே.

Tuesday, 22 September 2015

1827 முதல் 2015 வரை

 • காமிக்ஸ் என்றால் என்ன?
 • காமிக்சுக்கும், கிராபிஃக் நாவலுக்கும் என்ன வேறுபாடு?
 • முதல் காமிக்ஸ் கதை எது?
 • முதல் கிராபிஃக் நாவல் எப்போது வந்தது?
 • தமிழில் வெளியான முதல் சிறுவர் இதழ் எது?
 • தமிழின் முதல் கிராபிஃக் நாவல் எது?
 • தமிழில் வெளியான முதல் முழு வண்ண காமிக்ஸ் எப்போது வந்தது?
 • தமிழில் வெளியான முதல் டிஜிடல் காமிக்ஸ் எது?
 • தமிழின் முதல் காமிக்ஸ் சிண்டிகேட் எது?
இப்படியாக பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு அட்டகாசமான நிகழ்வு.

Get Ready for a roller coaster ride, Folks. Here we come.

Sunday, 20 September 2015

ஓவியர் செல்லம் நினைவு கூர்தல் கூட்டம்

டியர் காமிரேட்ஸ்,

கடந்த வெள்ளிக்கிழமை எனது வாழ்நாளில் மறக்கவியலாத நாட்களில் ஒன்றாகி விட்டது. அன்று தான் தமிழகத்தின் தலைசிறந்த சித்திரக்கதை ஓவியரும், (கொண்டாடப்படவேண்டிய) அரசியல் கார்ட்டூனிஸ்ட்டுமான திரு செல்லப்பன் (எ) செல்லம் அவர்களுக்கு ஒரு நினைவு கூர்தல் கூட்டம் நடந்தது.

வார இறுதியில் இல்லாமல் பணி நாளிலேயே இருந்தாலும், ஆறு மணிக்கு அல்லாமல் ஐந்து மணிக்கே என்றிருந்தாலும், பலரும் வந்து அரங்கினை நிறைத்து, விழாவினை சிறப்பித்தனர். குறிப்பாக ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ஐயா, ஓவியர் ஜெயராஜ், ஓவியர் மாருதி, ஓவியர் மணியம் செல்வம் அவர்கள், ஓவியர் திரு அரஸ், ஓவியர் “ஓவியர்” அவர்கள் மற்றும் திரு செல்லப்பன் அவர்களின் குடும்பத்தினர் என்று அனைவரும் கலந்துக்கொண்டதால் இது ஒரு முக்கியமான நினைவாக அமைந்தது.

விழாவின் ஆரம்பத்தில் ஓவியர் செல்லம் அவர்களின் சித்திரக் கடலில் இருந்து ஒரு சில முத்துக்களை Slide Show ஆக காண்பித்தனர். அதன் பின்னர் மக்களுக்கு செல்லப்பன் அவர்களின் வாழ்க்கை Chronological Orderல் அடியேனால் நினைவூட்டப்பட்டது. முதல்முறையாக ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்வதால், ஓரிரு குறைகள், Shortcomings தெரிந்தாலும், நிகழ்வை சிறப்பாகவே நடத்தியதாக அனைவரும் கூறியது நிறைவைத் தந்தது.

மேலும் திரு ஞானி ஐயா அவர்களின் பேச்சு அமரர் செல்லப்பனை எங்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது என்றே சொல்லலாம். குறிப்பாக வெள்ளை வேட்டியின் ஒரு முனையை கையில் பிடித்தபடி, கம்பீரமாக நடக்கும் அவரது அழகை சிலாகித்து பேசினார். செல்லப்பன் ஐயாவும் இவரும் ஏறக்குறைய 20 வருடங்கள் ஒரே குடியிருப்பில் இருந்ததோடில்லாமல், பல ஆண்டுகள் ஒன்றாகவே பணிபுரிந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரு ஜெயராஜ் அவர்கள் பேச்சில் சொன்ன ஒரு முக்கியமான விஷயம் “நாய் அங்கேயே இருக்கட்டுமே?” என்பது தான் இந்த கூட்டத்தின் ஹை லைட். அது என்ன நாய்? அது ஏன் அங்கேயே இருக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள, இந்த வீடியோ காணொளியை முழுவதுமாக காணுங்கள். ஜெயராஜ் ஐயா செல்லப்பன் அவர்களின் சிறப்பம்சங்களை அழகாக விளக்கியதும், அதை அவர் சொன்ன விதமும் மிகவும் சிறப்பாக இருந்தது.
ஓவியர் திரு மருதி அவர்கள், தான் ஏழ்மையின் நிழலில் இருந்தபோது அமரர் செல்லப்பன் அவர்கள் எவ்விதம் தனக்கு உதவி புரிந்தார்? என்பதை சொன்ன விதம் அவரது உதவும் மனப்பாங்கை வெளிப்படுத்தியது. மேலும் இரண்டு, மூன்று சுவையான சங்கதிகளையும், சம்பவங்களையும் அவர் சொன்ன விதம் அவரது ஓவியத்தை போலவே மிகவும் சிறப்பாக இருந்தது.
திரு மணியம் செல்வன் அவர்களது அமைதியான பேச்சு, செல்லப்பன் அவர்கள் வரையும் நேர்த்தியை நமக்கெல்லாம் விளக்கியது. ஒரு கதையின் தலைப்பை தான் எழுத எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில், நான்கு நகைச்சுவை துணுக்குகளை அழகாக வரைந்து முடித்து விடும் செல்லப்பன் அவர்களது வேகத்தை பற்றி அவர் சொன்ன முறை, நாம் எவ்வளவு பெரிய திறமைசாலியை இழந்திருக்கிறோம்? என்பதை உணர்த்தியது.
ஓவியர் திரு அரஸ் அவர்கள்  திரு செல்லப்பன் அவர்களை சந்திக்க விரும்பியதையும், அவரது மரணச்செய்தி கேட்டு, அவரது வீட்டிற்கு வந்து நினைவு அஞ்சலியை செலுத்தியதையும் அழகாக குறிப்பிட்டார். ஓவியர் திரு கே முரளிதரன் அவர்கள் பல அயல்நாட்டு ஓவியர்களின் ஓவியங்களுடன் செல்லப்பன் அவர்களது திறமையை ஒப்பிட்டு பேசினார். குறிப்பாக கோவாவைச் சேர்ந்த Mario Mirandaவின் ஸ்டைலும், செல்லப்பன் அவர்களது பாணியும் எப்படி இருந்தது? என்று ஆழகாக விளக்கினார்.
திரு ட்ராட்ஸ்கி மருது ஐயா அவர்கள் செல்லப்பன் அவர்கள் எவ்வளவு பெரிய அரசியல் கருத்து சித்திர ஓவியர் என்பதை சில பல உதாரணங்களுடன் விளக்கினார். குறிப்பாக 1967 ஆம் ஆண்டு தேர்தலில் செல்லப்பன் அவர்களது ஓவியங்களின் பங்கினையும், எவ்வாறு அவரது ஓவியங்கள் Strong, Definitive கோட்டோவியங்கலை கொண்டிருந்தது என்று Techinical ஆக விளக்கியதும் இந்த கூட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.
திரு செல்லப்பன் அவர்களது நெடுநாள் நண்பரின் மகனும், பின்னர் மருமகனாக மாறிய திரு துரை அவர்கள் அனைவருக்கும் நன்றியுரை தெரிவித்தார். திரு ஓவியர் அவர்கள் செல்லப்பன் அவர்களது ஓவியங்களை பற்றி சிலாகித்து பேசியது அழகாகவும், அருமையாகவும் இருந்தது. திரு குமரகுருபரன் அவர்கள் கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் நன்றியை கூறி, விழாவினை முடித்து வைத்தார்.
இந்த அருமையான விழாவை நேரில் காண இயலாதவர்களுக்காக, இதோ வீடியோ காணொளி: 

Monday, 7 September 2015

அன்னாருக்கு அஞ்சலி: #RIP Brad Anderson

டியர் காமிரேட்ஸ்,
இன்று ஒரு சோகமான தகவல் வந்து சேர்ந்தது. மற்றுமொரு காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் நம்மை விட்டுச் சென்றார் என்பதே அந்த தகவல். #RIP Brad Anderson

விலங்குகளை வைத்து கார்ட்டூன் மற்றும் காமிக்ஸ் தொடர்கள் பல இருந்தாலும், அவற்றில் அந்த விலங்குகளின் கண்களையோ, உணர்ச்சிகளையோ பிரதிபலிப்பது போல ஏன் யாரும் வரைவது இல்லை? என்ற கேள்விக்கு பதிலாக உருவாகிய ஓவியர் தான் பிராட் ஆண்டர்ஸன். தன்னுடைய 15 ஆவது வயதிலேயே தான் வரைந்த ஓவியம் பத்திரிகையில் வந்ததைக் கண்டு, தீவிரமாக ஓவியம் வரைய ஆரம்பித்த இவர், விளம்பர நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்ந்தார். 

1954இல் இவர் இரண்டு காமிக்ஸ் தொடர்களை ஆரம்பித்தார். அவற்றுள் ஒன்று தான் மர்மட்யூக். Great Dane வகையைச் சேர்ந்த ஒரு நாயின் சாகசங்களை, கோணங்கித்தனங்களை தினமும் காமிக்ஸ் ஸ்ட்ரிப் வடிவில் வழங்கினார் ஆண்டர்ஸன். அன்று முதல் இவரது மரணம் வரையில் (60 ஆண்டுகளுக்கு பிறகும்) 500 பத்திரிகைகளுக்கும் மேலே இவரது தொடர் வந்துக்கொண்டு இருப்பதே இதன் வெற்றியை நமக்கு எடுத்துரைக்கும்.2010இல் இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு முழுநீள திரைப்படமும் வந்தது. ஓயன் வில்ஸன் தான் மர்மட்யூக் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தார்.91 வயது வரையில் தனது திறமையால் நம் அனைவரையும் மயக்கிய ஒரு திறமைசாலியின் மரணச் செய்தி நம்மை துக்கத்தில் ஆழ்த்தினாலும், அவரது வாழ்வே கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்பதால், அவரது ஓவியங்கள் கொடுத்த மகிழ்ச்சியை மறுபடியும் ஒரு முறை இரசித்து கொண்டாடுவோம்.
அன்னாருக்கு அஞ்சலி.
நீங்கள் இரசிக்க, அவரது சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்காக.