டியர் காமிரேட்ஸ்,
காமிக்ஸ், சினிமா மற்றும் கதைகளில் நாம் காணும் அதி புத்திசாலிகளையும், வீர பராக்கிரம நாயகர்களையும் கடந்து அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் சாதாரண, சற்றே சொதப்பலான ஒரு கதாபாத்திரம் நம்மை கவர்வதில் ஆச்சரியமே கிடையாது. அந்த வகையில் இன்றைக்கு உலக அளவில் இளைய தலைமுறை வாசகர்களால் அதிகமாக விரும்பி படிக்கப்படும் காமிக்ஸ் தொடரான ஆர்ச்சியின் கதாநாயகன் ஒரு சாதாரண நடுத்தர இளைஞன் என்பதும், அவனை நமது பக்கத்து வீட்டுக்காரனாக பொருத்தி பார்க்க முடிவதுமே முக்கியமான காரணங்கள்.
காமிக்ஸ் கதைகளை வெளியிடுவதற்க்காக ஜான் கோல்ட்வாட்டர் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து MLJ என்ற பத்திரிக்கை நிறுவனத்தை 1939ல் துவக்கினார். அப்போது ஆன்டி ஹார்டி என்ற திரைப்பட தொடர் இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. அதே பாணியில் ஒரு கதைத்தொடரை உருவாக்க நினைத்த ஜான், பயணங்களில் தான் சந்தித்த நபர்களை மனதில் கொண்டு துணை கதாபாத்திரங்களை உருவாக்கினார்.
இப்படியாக ஒரு தொடருக்கான வடிவம் கிடைத்த உடன் கதாசிரியர் விக் ப்ளூம் மற்றும் ஓவியர் பாப் மொண்டானா ஆகியோரைக்கொண்டு 1941ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் ஆர்ச்சி கதாபாத்திரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். வெகுவிரைவில் இத்தொடர் பிரபலமாக, காமிக்ஸ் தொடரின் பெயரையே ஆர்ச்சி காமிக்ஸ் என்று மாற்றிவிட்டார். தன்னுடைய பள்ளி நண்பர்களையும், அவர்கள் புழங்கிய இடங்களையும் மனதில் கொண்டு ஓவியர் மொண்டானாவும் பல கதாபாத்திரங்களை உருவாக்கினார்.
டாம் மூர் & ஆர்ச்சி காமிக்ஸ்: (1928 – 20th July 2015) 86
இப்படிப்பட்ட ஆர்ச்சி காமிக்ஸ் தொடருக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக உயிரூட்டிய ஒரு அட்டகாசமான ஓவியர் தான் டாம் மூர். 1928ஆம் ஆண்டு அமெர்க்காவின் எல் பாசோவில் பிறந்த இவர், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நியூ யார்க்கில் இருந்த ஓவியப்பள்ளியில் சேர்ந்து முறையாக பயிற்சி பெற்றார் இவர். அப்போது அவருக்கு கற்பித்தவர் யார் தெரியுமா? டார்ஜான் கதாபாத்திரத்திற்கு ஓவியங்கள் மூலமாக உயிரூட்டிய Burne Hogarth தான்.
ஓவியக் கலையை முறையாக கற்ற பின்னர், நியூ யார்க்கிலேயே இவருக்கு ஆர்ச்சி காமிக்ஸ் கதையில் பண்புரியும் வாய்ப்பு 1951ல் கிடைக்க, உடனடியாக அதனை ஏற்றுக்கொண்டார் டாம். இப்படியாக சில பல ஆண்டுகள் நியூயார்க்கில் தங்கி இருந்த இவருக்கு ”நினைவில் காடு இருந்ததை” அவர் மறுபடியும் உணர்ந்து, மலைகள் நிறைந்த தனது சொந்த ஊரான டெக்சாஸுக்கு 1961ல் திரும்பினார்.
ஜக்ஹெட் ஜோன்ஸ் & டாம் மூர்:
அப்போது ஆர்ச்சி காமிக்ஸ் கதைகளில் ஒருவித தொய்வு ஏற்பட்ட் இருந்ததை உணர்ந்த எடிட்டர் விக்டர் கோர்லிக், அதனை எப்படி சரிகட்டுவது என்று சிந்தித்து வந்தார். அவரது சிந்தனையில் தோன்றிய முதல் நபர் டாம் மூர் தான்.
உடனே தொலைபேசியில் அவரை அழைத்த விகடர், சூழ்நிலையை விளக்க, மறுபடியும் ஆர்ச்சி காமிக்ஸ் தொடருக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் டாம்.
ஜக்ஹெட் ஜோன்ஸ் கதாபாத்திர மறு வடிவமைப்பு: ஒல்லியாக இருக்கும் ஜக்ஹெட், எப்படி இவ்வளவு உணவை சாப்பிடுகிறான் என்பது இன்றுவரை ஒரு புரியாத புதிர். மூடிய டின்னில் இருப்பது என்ன வகையான உணவு என்று சொல்லும் திறமைசாலியான ஜக்ஹெட், ஒரு தேர்ந்த சுவை நிபுணன். இவனது செயல்கள் அனைத்தும் இவனை ஒரு சோம்பேறி போல காட்டினாலும், சந்தர்ப்பங்களில் இவனது மூளை அபாரமாக செயல்படும். இவனது வளர்ப்பு நாயான ஹாட் டாக் ஜக்ஹெட்டைப்போலவே அதிகமாக சாப்பிடும். ஆர்ச்சி காமிக்ஸ் தொடரில் வரும் மற்ற கதாபாத்திரங்களை போலில்லாமல் ஜக்ஹெட் முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை மறு சீரமைத்துக் கொடுத்தார் டாம். அதன் பின்னர் மறுபடியும் தொடர்ந்து வரையத் துவங்கினார்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முன்கூட்டியே செயல்படுவாராராம் டாம். அதாவது டிசம்பர் இறுதியில் வெளியாகும் Christmas Special கதைகளை இவர் ஜூன் மாதத்திலேயே வரைந்து விடுவாராம். ஒவ்வொரு மாதமும் ஒரு முழு புத்தகத்திற்கான கதையை வரைந்து கொடுத்து வந்த இவர், 1986இல் தனது முதுமை காரணமாக ஓய்வு பெற்றார்.
மறைவு: கடந்த வாரம் தொண்டைப்புற்று நோய் இருப்பதை அறிந்த இவர், சிகிச்சைக்கு உட்பட மறுத்து விட்டார். மூன்று நாட்களுக்கு முன்பாக இறைவனடி சேர்ந்தார் டாம்.
அன்னாருக்கு அஞ்சலி.
சிறுவயதில் எங்கள் ஊர் நூலகத்தில் இருந்த ஆர்ச்சீ காமிக்ஸ் புத்தகங்களை போட்டி போட்டுக்கொண்டு எடுத்து படித்த அனுபவம் உண்டு... அதே போல பெட்டீ வெரோனிக்காவும் இவர் படைப்பு ?...
ReplyDeleteஆர்ச்சிக்கு உயிர் கொடுத்தவரின் கதையை உங்கள் பதிவின் மூலமே அறிகிறேன்.
அன்னாருக்கு அஞ்சலி.
நன்றி
சாமானியன்
எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி